நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று - அவர் கடந்து வந்த பாதை

cinema
By Nandhini Nov 19, 2021 04:36 AM GMT
Report

நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று - அவர் கடந்து வந்த பாதை 

நடிகர் விவேக் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ம் தேதி பிறந்தார். இவருடைய இயற்பெயர் விவேகானந்தன். விவேக் ஊட்டி கான்வென்ட்டில் பள்ளிப் படிப்பையும், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பி.காம்., பட்டமும் பெற்றவர். சிறுவயதிலேயே முறைப்படி பரத நாட்டியம் பயின்றவர். இவர் பல மேடைகளில் பரத நாட்டியம் ஆடி இருக்கிறார்.

நடிகர் விவேக் மதுரை அஞ்சல் தந்தி அலுவலகத்தில் பணியாற்றிய போது மதுரையில் நடைபெற்ற பரதநாட்டிய போட்டி ஒன்றில் பங்கேற்றார். அதன் பின்பு, இறுதி போட்டி சென்னையில் நடந்தது. அப்போதுதான் பாலசந்தருக்கு அறிமுகமானார் நடிகர் விவேக். இயக்குனர் கே.பாலச்சந்தரின் மூலம் தமிழ் திரையுலகிற்கு மனதில் உறுதி வேண்டும் என்ற படத்தின் மூலம் கால் பதித்தார்.

இதனையடுத்து, புது புது அர்த்தங்கள், மின்னலே பெண்ணின், மனதை தொட்டு, நம்ம வீட்டு கல்யாணம், தூள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் அடைந்தார். ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் இவர் பேசிய, ‘இன்னைக்கு செத்தா நாளைக்கு பால்’ டயலாக் இன்றைக்கும் நம் நினைவில் இருக்கும். நடிகர் விவேக்கிற்கு பிலிம்பேர் விருதுகள், தமிழக அரசு விருது, பத்மஸ்ரீ விருது உள்ளிட்ட விருதுகள் வாங்கியுள்ளார்.

லஞ்சம், மக்கள்தொகை பெருக்கம், ஊழல்கள், மூடநம்பிக்கை உள்ளிட்டவற்றுக்கு எதிராக விவேக் பேசிய கருத்துக்களால் இவர் சின்னச் கலைவாணர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். அப்துல் கலாமை முன்மாதிரியாக எடுத்து கொண்டு செயல்பட்டு வந்த இவர் கோடிக்கணக்கில் மரங்களை நட்டு சமூக நலப்பணிகளை ஆற்றி வந்தார்.

இவர் கடந்த ஏப்ரல் 17ம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மரணம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், விவேக்கின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 

நடிகர் விவேக் பிறந்தநாள் இன்று - அவர் கடந்து வந்த பாதை | Cinema