அதிக வட்டி தருவதாக கூறி என்னை ஏமாற்றி விட்டார்கள் - நடிகை சினேகா போலீசில் பரபரப்பு புகார்
தன்னிடம் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று பண மோசடி செய்துள்ளதாக பிரபல நடிகை சினேகா போலீசில் புகார் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா.
இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து படங்களில் சினேகா நடித்து வருகிறார்.
இந்நிலையில், தன்னை ஏற்றுமதி நிறுவனத்தினர் ஏமாற்றி பணம் பெற்று விட்டதாக சென்னை கானாத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில், கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனம் தன்னை முதலீடு செய்யும்படியும், அதன் மூலம் மாதம் தோறும் 1.80 லட்சம் வருவாய் கிடைக்கும் என்றும் கூறியது. அதன்படி தான் ரூ. 25 லட்சத்தை கௌரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்தேன். இதற்கான ஒப்பந்தமும் போடப்பட்டது. ஆனால், ஒப்பந்தத்தின்படி மாதம்தோறும் தனக்கான பணத்தை அந்நிறுவனம் கொடுக்கவில்லை. பணம் அளிப்பதாக கூறி தன்னை ஏமாற்றி முதலீடு செய்ய வைத்து ஏமாற்றிவிட்டார்கள். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.