சூர்யா சரியான பதில் சொல்லாமல், துளி கூட வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது சிறந்த பண்பு அல்ல - எம்.எஸ்.முருகராஜ்

cinema
By Nandhini Nov 18, 2021 03:30 AM GMT
Report

சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்திற்கு எதிராக வன்னியர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு, 'எம்10' தயாரிப்பு நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் ஒரு அறிக்கையில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது-

படைப்பு என்பது சமூக நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கருதுபவன் நான். சமூக நல்லிணக்கத்தை உருவாக்க முடியவில்லை என்றாலும், அதை சீர்குலைக்காமல் வைப்பது ஒவ்வொரு கலைஞனின் தார்மீக கடமை என்பதை, ‘வேதம் புதிது' படம் எடுத்தவருக்கு நான் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு சமுதாயத்தை தவறாக சித்தரித்து, படம் எடுத்ததை கண்டித்து, அந்த சமுதாய தலைவர்கள் கேட்ட கேள்விக்கு சரியாக பதில் சொல்லாமல், குறைந்தபட்ச வருத்தம் கூட தெரிவிக்காமல், சுய விளம்பரம் தேடிக் கொண்டிருக்கும் சூர்யா, தயாரிப்பாளர் சங்கத்தால் கண்டிக்க வேண்டியவரே.

சுதந்திரம் என்ற பெயரில், ரோட்டில் நிர்வாணமாக நடப்பது, இந்த சமூகத்திற்கு எவ்வளவு பெரிய அசிங்கமோ அதுபோன்ற அசிங்கம் தான், சூர்யா குறிப்பிடும் படைப்பு சுதந்திரம். ஆகச்சிறந்த படைப்பில் பெரும் விஷம் கலந்த குறியீடுகளும், புனைவு பெயர்களும் எதற்காக? 'குறியீடுகளை நீக்கி விட்டோம்' என சப்பைக்கட்டு கட்டுவது, சிறந்த கலைஞரின் சிறந்த பண்பு அல்ல.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

சூர்யா சரியான பதில் சொல்லாமல், துளி கூட வருத்தம் தெரிவிக்காமல் இருப்பது சிறந்த பண்பு அல்ல - எம்.எஸ்.முருகராஜ் | Cinema