‘ஜெய்பீம்’ பட சர்ச்சை - நடிகர் சூர்யா எங்கு சென்றாலும் கூடவே செல்லும் துப்பாக்கி ஏந்திய போலீஸ்
நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள படம் "ஜெய்பீம்". இப்படம் ஓடிடியில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்தத் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி ஒரு தரப்பினர் படத்திற்கும், நடிகர் சூர்யாவிற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக "ஜெய்பீம்" பட சர்ச்சை வேகமாக சமூகவலைதளத்தில் பரவத் தொடங்கியது. இதனையடுத்து, சென்னை தியாகராயநகர் ஆற்காடு தெருவில் உள்ள நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், ஆயுதப்படை போலீசார் சூர்யாவின் வீட்டில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சூர்யா தரப்பிலிருந்து எந்த ஒரு பாதுகாப்பு கேட்டு புகாரும் அளிக்கப்படவில்லை. உளவுத்துறைக்கு வந்த தகவலின்படி நடிகர் சூர்யாவின் வீட்டிற்கு 5 ஆயுதம் ஏந்திய போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
மேலும், நடிகர் சூர்யாவிற்கென்று தனியாக 2 துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் நடிகர் சூர்யா எங்கு சென்றாலும், கையில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் உடன் சென்று பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.