சூர்யாவின் 'ஜெய்பீம்' படத்துக்கு இயக்குனர் கவுதமன் கடும் கண்டனம்

cinema
By Nandhini Nov 06, 2021 04:23 AM GMT
Report

'ஒரு படைப்பு சமூகத்தை பண்படுத்த வேண்டுமே தவிர, புண்படுத்தக் கூடாது' என்று நடிகர் சூர்யாவுக்கு இயக்குனர் கவுதமன் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் 'ஜெய்பீம்'. இந்தப் படம் தற்போது ‘ஆன்லைனில்’ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் இருளர் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் குறித்து இயக்குனரும், நடிகருமான கவுதமன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது -

உண்மை சம்பவத்தை எடுக்கிறோம் என்று பிரகடனப்படுத்தி விட்டு, படைப்பின் பரபரப்பிற்காகவும், பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காகவும், தமிழ் சமூகத்தின் ஒரு குடியின் அடையாளமான, அக்னி குண்டத்தை திட்டமிட்டு, நேர்மையற்ற ஒரு கொடூரனின் வீட்டு அடையாளமாக காட்சிப்படுத்திய, நடிகர் சூர்யாவையும், இயக்குனர் ஞானவேலுவையும் கண்டிக்கிறேன்.

ஒரு படைப்பு என்பது எப்போதும், தன் சமூகத்தை பண்படுத்த வேண்டும்; புண்படுத்திவிடக் கூடாது. ஒரு கலவரத்தை படைப்பாக்கலாம். ஆனால், ஒரு படைப்பு ஒரு போதும் கலவரத்தை உருவாக்கிட கூடாது. அந்தோணிசாமி என்கிறவர் செய்தது, ஒரு மன்னிக்க முடியாத குற்றம். அவன் தவறு செய்தான் என்பதற்காக, அவன் சார்ந்த சமூகத்தையோ, மதத்தையோ கூட குற்றம் சுமத்துவது நேர்மையாகாது.

ஆனால், நீங்கள் அதையும் தாண்டி, அந்தோணிசாமி என்கிற பெயருக்கு பதிலாக, குருமூர்த்தி என பெயரிட்டு குருவையும், அக்னி குண்டத்தையும் திட்டமிட்டு அவமானப்படுத்தியது, அந்தோணிசாமி செய்த தவறையும் தாண்டி, நீங்கள் செய்த மாபெரும் தவறு.

மேலும், 'இந்த வழக்கில் நீதி கிடைத்த பின் தான் திருமணம் செய்து கொள்வேன்' என, அந்த குரலற்றவர்களின் குரலாக இறுதி வரை உயிர் உருக அருகில் நின்ற, கோவிந்தன் யார் என்பதையும், அவரின் தியாகத்தையும் மறந்தீர்களா அல்லது மறைத்தீர்களா? சில நுாற்றாண்டுகளாகவே இந்த மண்ணிற்கு சம்பந்தமில்லாத ஒரு கூட்டம், தங்களின் அரசியலுக்காகவும், ஆட்சி அதிகாரத்திற்காகவும் தமிழர்களுக்குள் நிரந்தர பகையை உருவாக்கி குளிர் காய்கின்றது. நேர்மையற்ற காட்சியை நீக்குவதோடு, தங்களையும் சரி செய்து கொள்ளுமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

சூர்யாவின்