"வீடு கட்ட வைத்திருந்த பணத்தைத்தான் புனித் ராஜ்குமார் உதவிய மாணவர்களுக்கு கொடுக்கிறேன்" - விஷால் பேட்டி
நான் வீடு கட்ட வைத்திருந்த பணத்தை புனித் ராஜ்குமார் படிக்க வைத்த மாணவர்களின் கல்விச் செலவுக்கு கொடுக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விஷால்.
நாளை நடிகர் விஷால் - ஆர்யா நடிப்பில் ‘எனிமி’ படம் வெளியாக இருக்கிறது. இதனையடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நடிகர் விஷால் நேற்று திருப்பதி வந்திருந்தார். திருப்பதி அலிபிரியிலிருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக நடந்து சென்ற விஷால் திருமலையில் இரவு தங்கியிருந்து இன்று காலை ஏழுமலையானை தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் நடிகர் விஷால் பேசியதாவது - ‘4 ஆண்டுகளாக ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் என நினைத்தேன்.
தற்போது மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து சுவாமி தரிசனம் செய்தது மனதில் உள்ள சுமை இறங்கியது போல் இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக பண்டிகைக் காலங்களில் திரைப்படங்கள் வெளியிட முடியாமல் இருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி எனது ‘எனிமி’ திரைப்படம் வெளியாக உள்ளது. இதனால் நான் மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உயிரிழப்பு குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் இல்லை என்ற உணர்வு எனக்கு ஏற்படுத்தியிருக்கிறது. அவர் எத்தனையோ பல நல்ல பணிகளை முன்னெடுத்து செய்திருக்கிறார். அவர் செய்ததில் ஒன்றை நான் தொடர முடிவு செய்தேன். எனவே, புனித் ராஜ்குமார் மூலம் படித்து வந்த பிள்ளைகளின் கல்வி செலவை நான் ஏற்பதாக தெரிவித்திருக்கிறேன்.
வீடு கட்டுவதற்காக பணம் வைத்திருந்தேன். இருப்பினும் தற்போது இல்லாவிட்டாலும் அடுத்த ஆண்டு நான் வீடு கட்டிக் கொள்வேன். முதலில் குழந்தைகளின் படிப்பு முக்கியம். நடிகர் புனித் ராஜ்குமார் செய்த சேவையில் ஒன்றை நான் தொடர ஆசைப்படுகிறேன் என்றார்.