எங்களுக்கு ரூ.50 கோடி இழப்பீடு தர வேண்டும் : நோட்டீஸ் அனுப்பிய நடிகை ஷில்பா ஷெட்டி
தங்களைப் பற்றி பொய் புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, எங்களுக்கு 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் பல பெண்களை ஆபாச 'வீடியோ' எடுத்து தனி இணையதளம் துவக்கி பதிவிட்டதாக புகார் எழுந்த அடிப்படையில் போலீசாரால் இவரை கைது செய்தனர். தற்போது தான் அவர் 'ஜாமீன்' கிடைத்தது.
இந்நிலையில், மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது, மற்றொரு நடிகையான ஷெர்லின் சோப்ரா ஒரு புகார் ஒன்றை கொடுத்தார். அதில் தம்பதியினர் மீது மோசடி, மிரட்டல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை கூறினார். இது குறித்து, ஷெர்லின் சோப்ராவுக்கு ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் தரப்பில் வக்கீல் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டிருக்கிறது.
அதில், விளம்பரம் தேடும் நோக்கில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருக்கிறது. அவதுாறு ஏற்படுத்துதல் மற்றும் பணம் பறித்தல் இதன் நோக்கமாக இருக்கிறது. வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஷில்பா ஷெட்டி மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது. எனவே பத்திரிகைகள் மற்றும் 'டிஜிட்டல் மீடியா' வாயிலாக 7 நாட்களுக்குள் பொது மன்னிப்பு கோருவதுடன், 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.