நடிகை யாஷிகா மருத்துவமனையில் எப்படி உள்ளார்? தகவல் தெரிவித்த தங்கை!
நேற்று முன்தினம் மாமல்லபுரம் அருகே நடிகை யாஷிகா நண்பர்களுடன் காரில் சென்ற போது, அதிவேகமாக கார் ஓட்டியுள்ளார். அப்போது, மின்னல் வேகத்தில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலை தடுப்பின் மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நடிகை யாஷிகா மற்றும் அவருடன் பயணித்த மூவரில் ஆண் நண்பர்கள் இருவர் படுகாயமடைந்தனர். தோழி வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து, நடிகை யாஷிகா மீது போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். யாஷிகா அதிவேகமாகக் காரை ஓட்டி வந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டதாக நடிகை யாஷிகா போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
தற்போது, நடிகை யாஷிகாவின் தங்கை ஓஷீன் ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நடிகை யாஷிகா உடல்நிலை குறித்து தகவல் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அனைவருக்கும் வணக்கம். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி. யாஷிகா தற்போது நினைவு திரும்பியுள்ளார். மேலும் கடவுளின் கிருபையால் அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக முடிந்தது. தற்போது அவர் ஐ.சி.யுவில் இருக்கிறார் மற்றும் அவருக்கு பல எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதால் இன்னும் சில அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும். எனவே அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.
