கார் விபத்து சம்பவம் – நடிகை யாஷிகா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
அதிவேகமாக கார் ஓட்டி, உயிர் சேதம் ஏற்படுத்தியதற்காக நடிகை யாஷிகா ஆனந்த் மீது மாமல்லபுரம் போலீசார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகை யாஷிகா தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இவர் விஜய் டிவி ஒளிபரப்பிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகை யாஷிகா ஆனந்த், தமிழ் சினிமாத்துறையிலும், மாடலிங் துறையிலும் பிஸியானார்.
இந்நிலையில், நடிகை யாஷிகா ஆனந்த் நேற்று நள்ளிரவு தனது காரில் தனது நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றிருக்கிறார். பார்ட்டிக்கு சென்று திரும்பிக் கொண்டிருக்கும்போது, கார் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரத்தில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், நடிகை யாஷிகா படுகாயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்ட யாஷிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் காரில் பயணித்த அவரது தோழி வள்ளிச்செட்டி பவணி என்பவர் கார் விபத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மேலும் இரண்டு ஆண் நண்பர்கள் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் தொடர்பாக மாமல்லபுரம் போலீசார் நடிகை யாஷிகா ஆனந்த் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதிவேகமாக கார் ஓட்டுதல், உயிர்சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது இந்த கார் விபத்து சம்பவம் தமிழ் சினிமாத்துறையிலும், ரசிகர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
