‘கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் ரூ.1.50 கோடி நிதியுதவி - திரைப்பட தொழிலாளர்கள் 3000 பேரின் வங்கி கணக்கில் விழுந்த ரூ.5000!
‘கேஜிஎஃப்’ நடிகர் யாஷ், கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு 3000 பேரின் தனித்தனி வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் என ரூ.1.50 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனாவின் 2-வது அலை இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசும், மாநில அரசும் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.இதனையடுத்து, இந்தியா முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனால், வேலையின்றி சினிமா தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாழ்வாதாரத்தை இழந்துள்ள கன்னட திரைப்பட தொழிலாளர்களுக்கு ‘கேஜிஎஃப்’ நடிகர் யாஷ் ரூ.1.50 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கொரோனா நம் கண்ணுக்குத் தெரியாத எதிரி என்பதை நிரூபித்துள்ளது.நம் நாடு முழுவதும் எண்ணற்றவர்களின் வாழ்வாதரத்தை கொரோனா முடக்கிவிட்டது. எங்கள் சொந்த கன்னட திரைப்பட சகோதரர்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதனால், கன்னட திரைப்படத்துறையில் பணிபுரியும் 21 துறைகளைச் சேர்ந்த 3000 தொழிளாளர்களின் தனிப்பட்ட கணக்கிற்கு ரூ 5000 செலுத்தப்படும். இந்தத்தொகை நாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்படும் இழப்பு. ஆனால் அவர்களின் வலிகளுக்கு தீர்வாகாது” என்று தெரிவித்துள்ளார். யாஷ் நடிப்பில் ‘கேஜிஎஃப் 2’ விரைவில் வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. யாஷின் இந்த உதவிக்கு கன்னட திரைப்படத் தொழிலாளர்கள் சங்கத் தலைவர் கோவிந்தா உருக்கமுடன் நன்றி என்று பதிவிட்டுள்ளார்.
