கொரோனா நோயாளிகளுக்காக ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, பிரபல நடிகர் ஒருவர் ஆம்புலன்ஸ் டிரைவராக மாறியுள்ளார். சமூகவலைத்தளங்களில் இவரை பாராட்டி பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்தியா முழுவதும் கொரோனா 2 வது அலை அதிகமாக பரவி வருகிறது. கொரோனா பிடியில் ஏராளமானவர்கள் சிக்கி தவித்து வருகின்றனர். மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு இடம் இல்லாமல் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் தற்போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மக்கள் பலர் இறந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய திரையுலகினர் தற்போது களத்தில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், பிரபல கன்னட நடிகர் அர்ஜுன் கவுடா, கொரோனா நோயாளிகளுக்கு உதவுதற்காக ஆம்புலன்ஸ் டிரைவாக மாறியிருக்கிறார்.
யுவரத்னா, ரஸ்டம், ஒடியா, ஆ துருஷ்யா உட்பட சில படங்களில் அர்ஜுன் கவுடா நடித்திருக்கிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய, புரொஜக்ட் ஸ்மைல் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ள அவர், ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறுதிச் சடங்கிற்கும் இவர் உதவி செய்து வருகிறார். இதுபற்றி தகவல் தெரிந்ததும் சமூக வலைதளங்களில் அர்ஜுன் கவுடாவை பலர் பாராட்டி வருகின்றனர். இதற்கு அர்ஜுன் கவுடா நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக இந்தப் பணியை செய்து வருகிறேன். இன்னும் 2 மாதத்துக்கு, நிலைமை சீராகும். அதுவரை இதைத் தொடர உள்ளேன். இதுவரை 6 பேருக்கு இறுதிச் சடங்குகளில் உதவி செய்திருக்கிறேன். தேவைப்படுவோருக்கு ஆக்ஸிஜன் வழங்கவும் தயாராக உள்ளேன் என்று கூறினார்.