ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை ரைசா மீது தோல் மருத்துவர் வழக்கு!
தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக நடிகை ரைசாவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோல் மருத்துவர் பைரவி வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பட்ட பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் மாடல் அழகி நடிகை ரைசா வில்சன். பிக்பாஸ் பிறகு ரைசாவுக்கு பட வாய்ப்புகள் தேடி வரத் தொடங்கின.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பிரபல தோல் மருத்துவர் பைரவி மீது புகார் ஒன்றை நடிகை ரைசா கொடுத்தார். thermal fillers என்று சொல்லப்படும் சிகிச்சைக்காக தான் பைரவியிடம் சென்று இருந்ததாகவும், அவர் எனக்கு தவறான சிகிச்சை அளித்ததால் என் முகம் ஒரு பக்கம் வீங்கி விட்டதாகவும் அவர் குற்றஞ் சாட்டினார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கி விட்டதாக கூறி, புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டார். ரைசாவின் புகைப்படத்தைப் பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதனையடுத்து, ரைசா, தோல் மருத்துவர் பைரவி எனக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு கொடுக்காவிட்டால் நீதிமன்ற நடவடிக்கை எடுப்பேன் என்று டுவிட்டரில் எச்சரிக்கை விடுத்திருந்தார். மருத்துவ ஆணையத்திலும் பைரவிக்கு எதிராக நடிகை ரைசா புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து, பொதுவெளியில் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியதற்காக நடிகை ரைசாவிடம் ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு தோல் மருத்துவர் பைரவி வழக்குத் தொடர்ந்திருக்கிறார்.
இது குறித்து சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பைரவி, முக அமைப்பை அழகாக மற்றும் சிகிச்சை ரைசாவுக்கு அளித்தேன். இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டால் சில கட்டுப்பாடுகள் கடைபிடிக்க வேண்டும். நடிகை ரைசா சிகிச்சைக்கான கட்டுப்பாடுகளை கடைபிடிக்கத் தவறியதால் அவரது முகம் வீங்கி இருக்கலாம் என்று தெரிவித்தார்.