வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

cinema
By Nandhini Apr 23, 2021 11:11 AM GMT
Report

கொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் நடிகர் மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்நிலையில், நடிகர் விவேக் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு வந்திருந்த நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனா தொற்று என இல்லாத ஒன்றை இருப்பதாக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பொய் சொல்லி வருவதாகவும், யாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும், கொரோனா தடுப்பூசி குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், அரசின் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அரசின் மக்கள் நலப் பணிக்கு எதிராக இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோடம்பாக்கம் மண்டல மருத்துவ அலுவலர் பூபேஷ் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வழக்கை ரத்து செய்யக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் | Cinema

அந்த புகாரின் பேரில் பொது அமைதியை கெடுத்தல், தொற்று நோயை பரப்பும் தீய எண்ணத்துடன் நடந்து கொள்ளுதல், உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் முன்ஜாமீன் கோரியும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

அவர் அளித்துள்ள அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது -

தனது பேட்டியை மாநகராட்சி ஆணையர் தவறாக புரிந்து கொண்டார். உள்நோக்கத்தோடு வேண்டும் என்று தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பவில்லை. எதேச்சையாக பேட்டியில் வெளிப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.

அதே போல, கொரோனா தடுப்பூசி செலுத்துவதை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும், தடுப்பூசி குறித்து தவறாக எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது உயர்நீதிமன்றத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரியும், முன்ஜாமீன் கோரியும் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது