ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் தவித்தோம்... உடைந்து அழுத பிரபல நடிகர்!

cinema
By Nandhini Apr 21, 2021 09:04 AM GMT
Report

கன்னடத் திரையுலகைச் சேர்ந்தவர் சாது கோகிலா, தனது சகோதரர் மகனுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் கிடைக்காமல் தேடி அலைந்த அனுபவத்தை ஊடகங்களிடம் கூறும்போது கண்ணீர் விட்டு அழுதது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவிட் இரண்டாவது அலை இந்தியாவில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இதில் கர்நாடக மாநிலமும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் கொரோனா சிகிச்சைக்கு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு போதிய வசதி எதுவும் செய்து தரவில்லை என்று பிரபல இசையமைப்பாளர் குருபிரசாத் குற்றம் சாட்டினார். பின்னர், கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை இது குறித்து விமர்சனம் செய்தார்.

இந்நிலையில், கன்னடத் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரும், இசையமைப்பாளரும், இயக்குநருமான சாது கோகிலா செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர், கோவிட்-19 தொற்று அதிகம் பரவி வருகிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அவர் தொடர்ந்து பேசும்போது உடைந்து அழ ஆரம்பித்தார். நட்சத்திர அந்தஸ்தில் இருக்கும் எனக்கே, எனது சகோதரரின் மகனுக்காக ஆக்சிஜன் சிலிண்டர் ஏற்பாடு செய்ய அதிகமாக அலைய வேண்டியிருந்தது. அது ஒரு கொடுமையான அனுபவம். இப்படி இருக்கையில் பொதுமக்களுக்கு, அவர்களின் உறவினர்களுக்கு சிகிச்சை கிடைக்க எவ்வளவு போராட வேண்டியிருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

ஊடகங்களில் சொல்லப்படுவது எல்லாம் உண்மைதான். ஆக்சிஜன், மருந்துகள், படுக்கைகள் என அனைத்துக்கும் பற்றாக்குறை தற்போது ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் உடலைத் தகனம் செய்யக் கூட பல மணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது. இந்த நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. இப்போது எனது சகோதரர் மகன் தேறிவிட்டாலும் அந்தக் கொடுமையான அனுபவத்தை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது என்று தழுதழுத்த குரலில் பேசினார்.