சர்ச்சையில் சிக்கிய யோகி பாபுவின் ‘மண்டேலா’ படம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

cinema
By Nandhini Apr 21, 2021 07:08 AM GMT
Report

மண்டேலா படத்தை மறுபடியும் தணிக்கை செய்யக்கோரிய வழக்கில் திரைப்பட தணிக்கை வாரியம், படத் தயாரிப்பு நிறுவனம், இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த மண்டேலா திரைப்படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இந்த படம் தேர்தல் நேரத்தில் மிகச் சரியாக வெளியானதால் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், யோகி பாபு நடித்த மண்டேலா படத்தை மறு தணிக்கை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முடிதிருத்துவோர் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்தது.

அந்த மனுவில், “மருத்துவர் சமுதாயம் என்பது மிகவும் பிற்படுத்தபட்ட சமூகத்தைச் சேர்ந்தது. காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பில் வெளிவந்த மண்டேலா திரைப்படம் ஏப்ரல் 4ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நேரடியாக வெளியானது. இந்தப் படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களைக் கழிவறையை சுத்தம் செய்வது போன்ற காட்சிகள் மற்றும் முடி திருத்தும் தொழிலாளியைச் செருப்பால் அடிப்பது, காரில் ஏற அறுகதை இல்லை என காரின் பின்னே ஓடி வர சொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

சர்ச்சையில் சிக்கிய யோகி பாபுவின் ‘மண்டேலா’ படம்  -  உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Cinema 

இதனைத் தணிக்கைக் குழு தணிக்கை செய்ய தவறிவிட்டது. படத்தில் வசனங்கள் மருத்துவர் சமுதாய மக்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் உள்ளது. இப்படத்தை மீண்டும் தணிக்கை செய்ய வேண்டும். சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் வசனங்கள் படத்திலிருந்து நீக்க தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, திரைப்பட தணிக்கை வாரியம் மற்றும் படத் தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோ, இயக்குநர் மடோன் அஸ்வின் ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த மனு மீதான விசாரணை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.