விவேக்கின் கனவை இனி நான் செயல்படுத்தப் போகிறேன்- பிரபல நடிகை சபதம்

cinema
By Nandhini Apr 20, 2021 10:17 AM GMT
Report

நடிகர் விவேக்கின் நினைவாக மரக்கன்று நடும் பணியை இனி தான் செயல்படுத்தப்போவதாக பிரபல நடிகை ஆத்மிகா தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2ம் அலை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் உயிரிழப்புகள் ஏற்படாத வண்ணம், அவற்றை கட்டுப்படுத்த தொற்றுக்கெதிரான தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசும், மாநில அரசும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

இதனை ஊக்குவிக்கும் விதமாக நடிகர் விவேக் கடந்த 15ம் தேதி தடுப்பூசி செலுத்திக் கொண்டு, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நீங்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

ஆனால், மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, வடபழனி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி உயிரிழந்தார்.

விவேக்கின் உயிரிழப்பு இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கானோருக்கு சோகத்தை ஏற்படுத்தியது. சினிமாத்துறையினர், அவரது ரசிகர்கள் அனைவரும் விவேக்கிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அரசியல் தலைவர்கள் தங்களது சமூகவலைத்தளங்களில் அவருக்கு இரங்கலை தெரிவித்தனர்.

நடிகர் விவேக்கின் மரங்கள் நடும் இயக்கமானது மக்கள் மத்தியில் தற்போது மீண்டும் துளிர் விடத் தொடங்கியிருக்கிறது.

விவேக்கின் கனவை இனி நான் செயல்படுத்தப் போகிறேன்- பிரபல நடிகை சபதம் | Cinema

இதனைத் தொடர்ந்து, தற்போது சினிமாத்துறையினரும், அவரது ரசிகர்கள் பலரும் மரக்கன்றுகளை நட்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகையான ஆத்மிகா, விவேக் விட்டுச் சென்ற பணியை முன்னெடுப்பதாக தெரிவித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக தனது வீட்டில் மரக்கன்றை நட்டு பணியை தொடங்கியிருக்கிறார்.

இது குறித்து, ஆத்மிகா தனது டுவிட்டர் பக்கத்தில், “நடிகர் விவேக் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன். என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார். அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.” என பதிவிட்டுள்ளார்.