பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு நடிகை சமந்தா கொடுத்த சர்ப்ரைஸ் பரிசு
நடிகை சமந்தா தமிழில், ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் சிறிய ரோலில் நடித்தார். ‘பானா காத்தாடி’ படம் மூலம் கதாநாயகியாக நடித்து பிரபலமடைந்தார். அதன் பிறகு நடிகர் விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி என பல நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார்.
இதனையடுத்து, நடிகர் நாகர்ஜுனா மகனும், நடிகருமான நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, பல சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
நடிகை சமந்தா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஒருவர், நான் ஆட்டோ ஓட்டுநர். எனக்கு ஏழு சகோதரிகள் இருக்கிறார்கள். தனது பெற்றோர் இறந்து விட்டனர். என்னுடைய சகோதரிகளை நான்தான் காப்பாற்றுகிறேன்.
என் குடும்பத்திற்காக நான் ஆட்டோ ஓடுகிறேன். ஆனால், ஆட்டோ ஓட்டி கிடைக்கும் வருமானம் என் குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை என்று அந்தப் பெண் நடிகை சமந்தா முன்னிலையில் கண்ணீருடன் கூறினார்.

இதை கேட்ட நடிகை சமந்தா, தனது சொந்த செலவில் கார் ஒன்றை பெண்ணுக்கு வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார். கார் மூலம் டிராவல்ஸ் நடத்தி நீங்கள் அதிகப்படியான வருமானத்தை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தான் அளித்த வாக்குறுதியின்படி நடிகை சமந்தா, அப்பெண்ணிற்கு ரூ.12.5 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். சமந்தாவின் இந்த செயலை சமூகவலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.