கடைசியாக விவேக் சொன்னதை நான் வலியுறுத்துவேன்– நடிகர் வையாபுரி உருக்கம்
நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 15ம் தேதி அரசு ஓமந்தூரர் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பத்திரிகையாளர் மத்தியில், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அதற்கு மறுநாளே திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 17ம் தேதி காலை 4 மணியளவில் உயிரிழந்தார்.
தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் நடிகர் விவேக் இறந்து விட்டதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், விவேக் மரணத்திற்கு தடுப்பூசி காரணம் இல்லை என்று சுகாதாரத்துறை விளக்கம் அளித்தது. விவேக்கிற்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களும் அதையே தெரிவித்தனர்.

இந்நிலையில், மதுரையில் மறைந்த நடிகர் விவேக்கிற்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நடிகர் வையாபுரி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், விவேக் கடையாக கொடுத்த பேட்டியில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று மக்களுக்காக இந்த கருத்தை சொல்லிவிட்டுச் சென்றார். 45 வயதுக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றார். அதனால் நான் இனிமேல் எந்த இடத்திற்கு சென்றாலும், எங்கு பேசினாலும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என விவேக் சொன்னதை வலியுறுத்துவேன் என்றார்.