என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு நன்றி- நடிகர் விவேக் மனைவி உருக்கம்
மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக், சிகிச்சை பலனின்றி காலமானார்.
இவரின் இறப்பு அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும் பேரதிர்ச்சியை அளித்தது.
அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில் நடிகர் விவேக்கின் நண்பரும், நகைச்சுவை நடிகருமான மயில்சாமி பேசுகையில், விவேக்கின் அஸ்தி கடலில் கரைப்படும். வீடு வீடாக சென்று மக்களிடம் மரக்கன்றுகள் நடுவதற்கு வேண்டுகோள் விடுப்போம். விவேக் கனவை நாங்கள் தொடர்ந்து நிறைவேற்றுவோம் என்றார்.
இதற்கிடையே நடிகர் விவேக்கின் மனைவி பத்திரிகையாளர்களை சந்தித்து பேசுகையில்,
என் கணவரை நாங்கள் இழந்து நிற்கிறோம். என் குடும்பத்திற்கு பக்கபலமாகவும், ஒரு மிகப் பெரிய துணையாகவும் நின்ற மத்திய அரசுக்கு, மாநில அரசுக்கு என் குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றி.
என் கணவருக்கு அரசு மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. நீங்கள் கொடுத்தது என் கணவருக்கு மிகப் பெரிய கவுரவம். காவல்துறை சகோதர்களுக்கு மிக்க நன்றி.
கடைசி வரைக்கும் நீங்கள் கூட இருந்தீர்கள். ஊடகத்துறையில் இருக்கும் சகோதரர்கள் அனைவருக்கும் நன்றி. வெகு தொலைவிலிருந்து என் கணவருக்கு அஞ்சலி செலுத்த வந்த கோடானகோடி ரசிகர்களுக்கு நன்றி என்று உருக்கமாக பேசினார்.