நடிகர் விவேக் மறைவிற்கு 59 மரக்கன்றுகள் நட்டு வைத்து கோவை நடிகர் சங்கம் அஞ்சலி
மறைந்த நடிகர் விவேக்கிற்கு கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பாக 59 மரக்கன்று நட்டு வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் 16ம் தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் நேற்று அதிகாலை 4 மணியளவில் சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் உயிரிழந்தார்.
இவரின் இறப்பு அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், தமிழ் திரையுலகத்தினருக்கும் அதிர்ச்சியை அளித்தது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த நடிகர் விவேக் சமூக ஆர்வலர். சமுதாயத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த, பல லட்சத்திற்கு மேல் மரக்கன்றுகளை நட்டுள்ளார். இந்நிலையில், கோவை மாவட்ட நடிகர் சங்கம் சார்பில், தலைவர் சாகுல் தலைமையில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆத்துப்பாலம் பாப்புலர் வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக குட்டிப்புலி பிரபல நடிகர் ராஜசிம்மன், நகைச்சுவை நடிகர் சாப்ளின் பாலு, விஜய் மக்கள் இயக்க மாணவரணி தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். மறைந்த நடிகர் விவேக்கின் ஆன்மா சாந்தியடைய அவரது படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
சின்னக்கலைவாணர், நடிகர் விவேக்கின் ஒரு கோடி மரங்கள் நடும் பணியை அனைத்து இயற்கை ஆர்வலர்கள் மற்றும் இளம் தலைமுறையினர் தொடரும் வகையில், அவரது 59-வது பிறந்தநாளை நினைவு கூறும் விதமாக அந்த வளாகத்தில் 59 மரக்கன்றுகள் நடப்பட்டது.
