கடை திறப்புக்கு சென்ற குக்வித் கோமாளி புகழ் - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு!
நெல்லையில் ஒரு செல்போன் கடையை திறந்து வைப்பதற்காக விஜய் டிவி புகழ் கலந்துகொண்டார். அவரை பார்க்க மக்கள் முண்டியடித்து கூட்டம் அதிகமானதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி, இந்த நிகழ்ச்சி கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் அனைவருமே மக்கள் மத்தியில் தற்போது மிகவும் பிரபலமடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் குறிப்பாக குக் வித் கோமாளியாக வரும் புகழ் செய்யும் அட்டகாசங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.
சமீப காலமாக குக்வித் கோமாளி பிரபலங்களை மக்கள் கொண்டாடுவதால் அந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபர்களை கடைதிறப்பு விழா உள்ளிட்ட விளம்பரங்களுக்கு அழைக்கப்படுகின்றனர். இந்நிலையில் நெல்லை வண்ணார்பேட்டையில் ஒரு செல்போன் கடை திறப்பு விழாவிற்கு குக் வித் கோமாளி புகழ் சிறப்பு விருந்தினராக காரில் சென்றிருக்கிறார்.

அவரை காண ஏராளமான ரசிகர்கள் கடை முன்பு அதிகளவில் திரண்டு முண்டியடித்தனர். கொரோனாவின் 2ம் அலை அதிகளவில் பரவி வருவதால், தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக கூட்டம் கூடியதால் மக்களை தடியடி நடத்தி கலைத்துள்ளனர். குக் வித் கோமாளி புகழையும் திருப்பி அனுப்பினர். அந்த கடைக்கு சீல் வைத்த மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக கடை உரிமையாளருக்கு ரூ.5,000 அபராதமும் விதித்துள்ளனர்.