கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 700 சிறப்பு பஸ்கள் இயக்கம்
கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. மேலும் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகும். தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.
தொடர்விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து நேற்று ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே ரெயில்வே பாலத்தில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக அந்த வழியாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு செல்லும் 65-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
இதன் காரணமாக ரெயில்களில் முன்பதிவு செய்திருந்த பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்துவிட்டு பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதன் காரணமாக நேற்று சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையங்களில் வழக்கத்தை விட அதிகமாக கூட்டம் காணப்பட்டது.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் நேற்று ஒரே நாளில் 700-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- கிறிஸ்துமஸ் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தொடர்விடுமுறையை கருத்தில் கொண்டு கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறோம்.
ரெயில்வே பாலம் விரிசல் காரணமாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பெங்களூரு, வேலூர், கோவை, சபரிமலை செல்லும் வழித்தடங்களில் கூடுதல் விரைவு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
நேற்று வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களுடன் கூடுதலாக 700 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் காரணமாக பயணிகள் எந்தவித சிரமமும் இல்லாமல் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.