கிறிஸ்துமஸ் கோலாகலம் - தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை - மக்கள் உற்சாக கொண்டாட்டம்
கிறிஸ்துமஸ் பெருவிழா உலகம் முழுவதும் கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
இந்த பிரார்த்தனை கூட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கலந்து கொண்டனர். சென்னை, கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல இடங்களில் மக்கள் உற்சாகமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
சென்னை பெசன்ட் நகர் புனித தோமையார் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் பல குடும்பத்துடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அதேபோல் தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கிறிஸ்துவ பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டதுடன், இனிப்புகளை பரிமாறி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
கொரோனா காரணமாக கடந்த ஆண்டு களையிழந்து காணப்பட்ட கிறிஸ்துமஸ் பெருவிழா, இந்த முறை மீண்டும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.