விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்க வேண்டும்; இல்லையெனில்.. கிறிஸ்தவ சங்கம் கண்டனம்!
நடிகர் விஜய் ஆண்டனிக்கு தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி
விநாயக் வைத்தியநாதன் இயக்கும் ரோமியோ என்ற படத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ளார். இந்த படத்தை விஜய் ஆண்டனியே தயாரித்துள்ளார். மேலும், மிருணாளினி ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று ரோமியோ படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது படத்தின் ட்ரெய்லரில் வரக்கூடிய ஒரு காட்சியை குறிப்பிட்டு "ஏன் அந்த முதலிரவு காட்சியில் மது குடித்தீர்கள்? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த விஜய் ஆண்டனி "மது என்பது ஆண் பெண் என் வேறுபடுத்தி பார்க்கக் கூடாது. குடிப்பது அனைத்து பாலினருக்கும் பொதுவான ஒன்று. புராணத்தில் இயேசு கிறிஸ்து திராட்சை ரசத்தை குடித்துள்ளார்.
கண்டனம்
ராஜ ராஜ சோழன் காலத்தில் சோமபானம் குடித்துக் கொண்டு இருந்தார்கள்" என்றார். இது சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு கிறிஸ்துவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் "உலகெங்கும் வாழும் அனைத்து கிறிஸ்தவ பெருமக்களாலும் ஜாதி மதத்துக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினராலும் போற்றப்படக்கூடியவர் தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்து.
கிறிஸ்துவர்களையும் இயேசு கிறிஸ்துவையும் இழிவுபடுத்தும் விதமாக எந்த ஆதாரம் இல்லாமல் திராட்சை ரசத்தை போதை வஸ்துவுடன் ஒப்பிட்டு, ‘இயேசு கிறிஸ்து மது குடித்தார்’ என பொதுவெளியில் பேசி மாபெரும் கிறிஸ்தவ சமூகத்தினரின் மனதை புண்படுத்திய நடிகர் விஜய் ஆண்டனி பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் அவர் வீட்டின் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.