உயிருக்குப் போராடும் பிரபல கிரிக்கெட் வீரர்...!
நியூசிலாந்து அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் உடல்நிலைப் பாதிப்பால் உயிருக்கு போராடி வருகிறார்.
நியூசிலாந்து அணியில் கடந்த 1989 முதல் 2006 வரை முக்கிய ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கிறிஸ் கெய்ன்ஸ் 2 டெஸ்ட் போட்டிகள், 215 ஒருநாள் போட்டிகள், 2டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதன்பின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப்பெற்ற அவர் லீக் போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
இதனிடையே மேட்ச் பிக்ஸிங் சர்ச்சையில் கடந்த 2008ம் ஆண்டு கெய்ன்ஸ் சிக்கி, அதற்கும் தனக்கும் தொடர்பில்லை என வழக்குத் தொடர்ந்து கடந்த 2012 ஆம் ஆண்டு வெற்றியும் பெற்றார். ஆனால் அவருக்கு சோதனைக்காலம் தொடர்ந்தது. நியூசிலாந்து அணியின் சக வீரர்களான லூ வின்சென்ட், பிரன்டன் மெக்கலம் இருவரும் தங்களை மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட கெய்ன்ஸ் தூண்டினார் என்று புகார் எழுப்பினர். இந்த சர்ச்சையிலிருந்தும், வழக்கிலிருந்தும் விடுபடுவதற்கு கெய்ன்ஸ் நீண்ட சட்டப்போராட்டம் நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஏராளமான பணத்தையும் செலவிட்டார்.
ஒரு கட்டத்தில் வழக்கை நடத்துவதற்கும் குடும்பத்தை நடத்தவும் பணமில்லாமல் தவித்த கெய்ன்ஸ் ஆக்லாந்து லாரி ஓட்டுநர்கள் சங்கத்தில் லாரிகளையும், அதன் பணிமனைகளையும் சுத்தம் செய்யும் பணியில் கெய்ன்ஸ் ஈடுபட்டு ஊதியம் ஈட்டினார். 51 வயதாகும் கிறிஸ் கெய்ன்ஸுக்கு உடல்நலக்குறைவால் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது கேன்பெரா நகரில் இதயத்தில் ரத்த நாளத்தில் ஏற்பட்ட கோளாறால் திடீரென அவர் மயங்கி விழுந்தார். தற்போது கேன்பெரேரா நகரில் உள்ளமருத்துவமனையில் ஆக்சிஜன் உதவியோடு கெய்ன்ஸுக்கு தீவிரமான சிகிச்சை தொடர்ந்து அளித்தும் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை.
விரைவில் சிட்னியில் உள்ள சிறப்பு மருத்துவமனைக்கு கெய்ன்ஸ் கொண்டு செல்லப்பட உள்ளார். அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.