நாட்டை உலுக்கிய ஹெலிகாப்டர் விபத்து: ராணுவ துப்பாக்கிகள் மீட்பு

helicopter crash
By Fathima Dec 11, 2021 04:04 AM GMT
Report

நீலகிரியின் காட்டேரி நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் நாட்டையே அதிரவைத்துள்ளது.

மொத்தம் 14 பேர் பயணிக்க, ஒருவர் மட்டும் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார், பெங்களூர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு விமானப்படை ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங்கை விசாரணை அதிகாரியாக அரசு நியமித்துள்ளதை தொடர்ந்து, நேற்று 2-வது நாளாக நேற்று ஹெலிகாப்டர் விபத்து நடந்த நஞ்சப்பசத்திரம் பகுதியை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

சுமார் 2 மணி நேரம் அதிகாரிகளுடன் ஆலோசித்து விசாரணையை மேற்கொண்டார். அவருடன் விமானப்படை துணை மார்ஷல் சஞ்சீவ் ராஜ் உடனிருந்தார்.

ரன்னிமேடு ரெயில் பாதை அருகே சுற்றுலா பயணி ஒருவர் ஹெலிகாப்டர் விபத்து ஏற்படுவதற்கு முன்பு கடும் பனிமூட்டத்தில் சென்ற போது வீடியோ எடுத்து உள்ளார். அந்த இடத்திற்கு விசாரணை அதிகாரி சென்று ஆய்வு செய்தார். அங்கு ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்ததா, கடும் பனிமூட்டம் நடுவே சென்றது குறித்து விசாரணை நடத்தினார்.

2-வது நாளாக விமானப்படை சிறப்பு குழுவினர் நவீன கருவிகளுடன் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்துக்கு வருகை தந்தனர்.

அவர்கள் ஹெலிகாப்டர் விழுந்த இடம், மரங்கள் மீது மோதிய பகுதி, வனப்பகுதி உள்ளிட்ட இடங்களில் நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்தனர். டிரோன் கேமரா பறக்கவிட்டு ஆய்வு பணியை மேற்கொண்டனர்.


ஹெலிகாப்டரின் பின்னால் இருந்த வால் பகுதி உடைந்து விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்து பள்ளத்தில் விழுந்தது. 15 அடி நீள வால் பகுதி எரியாமல் இருந்தது.

மேலும் ராணுவ வீரர்கள் கொண்டு வந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட துப்பாக்கிகள் மீட்கப்பட்டது. பிஸ்டல் மற்றும் அதனை லோடு செய்ய பயன்படுத்தப்படும் உபகரணங்களை விமானப்படையினர் சேகரித்தனர்.

எரிபொருள் பயங்கர சத்தத்துடன் வெடித்ததால் துப்பாக்கிகள் எரிந்த நிலையில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அதேபோல் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.