சித்திரை தேரோட்டம் - கோலாகலமான சமயபுரம் மாரியம்மன் கோவில்
சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் இன்று நடக்கிறது.
தேரோட்டம்
சித்திரை மாதம் அம்மனுக்கு மிகவும் உகந்த மாதமாகக் கருதப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை மாத தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தேர்த் திருவிழா கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி என்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இந்நிலையில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா இன்று காலை 10.31 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதனைத் தொடர்ந்து திருத்தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
குவிந்த பக்தர்கள்
பல பக்தர்கள் மஞ்சள் உடை உடுத்தி கடுமையான விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக சமயபுர கோவிலுக்கு வருவார்கள். அதன் பின்னர் தெப்பக் குளத்தில் நீராடி அங்கிருந்து காவடி எடுத்து, அக்னி சட்டி தூக்கி, அழகு குத்தி, எனப் பலவிதமான வேண்டுதல்களை கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் பின்பற்றுவார்கள்.
பின்னர் கோயிலை வளம் வந்து நீண்ட வரிசையில் நின்று அம்மனை வழிபாடு செய்வார்கள்.
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், சுமார் 1200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பணியில் ஈடுபட்டுள்ளனர்.