சித்ரா கடைசியா பேசுனது.. என் ஈரக்கொல நடுங்கிடுச்சு- தாய் கண்ணீர் பேட்டி
மறைந்த பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா சினிமாவில் முதன்முறையாக நடித்த ’கால்ஸ்’ திரைப்படம் பிப்ரவரி 26-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ட்ரைலரே 2 மில்லியன் வியூஸைத் தாண்டிச் சென்று எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், சித்ராவின் தாய் விஜயா புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், "உயிரோட இருந்தாலும் உயிர் இல்லாத மாதிரிதான் உணர்றோம்.
எம்பொண்ணு எங்களை விட்டுப்போயி மூணு மாசம் ஆகப்போகுது. ஆனா, தினமும் அவளை நினைச்சி நினைச்சி அழாத நாளில்லை. அவ நினைவுகள்ல இருந்து மீண்டு வரமுடியலை; வரவும் முடியாது. அவ்ளோ பாசமான பொண்ணு.
‘எங்களை ஏண்டி விட்டுட்டுப் போனன்னு கேட்டு அழுவறதா? அன்னைக்கு நைட்டு ஹோட்டல்ல என்னடி நடந்ததுன்னு கேக்குறதா? ஏண்டி இந்த மாதிரி ஒருத்தரை தேர்ந்தெடுத்த?’னு அவக்கிட்ட கேக்கணும்னு தோணுது. சாப்பிடவே பிடிக்க மாட்டுது. நானும் அவ அப்பாவும் தினமும் ஹாஸ்பிட்டலுக்கும் வீட்டுக்கும் அலைஞ்சிட்டு கிடக்குறோம்.
சுகர், பிபி எல்லாம் இருக்கு. அழுது அழுது சுகர் ஒருமுறை ஏறிப்போகுது. ஒருமுறை லோ ஆகிப்போய்டுது. இப்படித்தான், நாங்க அனுபவிச்சிட்டு போய்ட்டிருக்கோம். கடந்த 2019 ஆம் ஆண்டு இயக்குநர் சபரி ’கால்ஸ்’ படத்தோட கதையைச் சொன்னார். எங்க எல்லோருக்குமே கதை பிடிச்சிடுச்சி. அதனால, சந்தோஷமா ஓகே சொன்னோம். சித்ராவும் சிறப்பா நடிச்சிக் கொடுத்தா.
எப்போப் பாரு படத்தைப் பத்தியே பேசுவா. ’படம் நடிக்கிறது ஈஸியா இருக்குமா. சீரியலில் நடிக்கிறதுதான் கஷ்டமா இருக்கு. சீன்லாம் நல்லா வந்திருக்கும்மா. படம் வெளியாகும்போது வேற லெவலா இருக்கும் பாருங்க’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பா. சீரியலில் நல்ல நடிகைன்னு பேர் வாங்கிட்டா. சினிமாவிலும் அந்தப் பேரை வாங்க ரொம்ப ஆவலா காத்துக்கிட்டு இருந்தா. அதையெல்லாம் பார்த்து சந்தோஷப்படுறதுக்குள்ளேயே எம்பொண்ணு வாழ்க்கையை சூனியமாக்கிட்டாங்க.
ட்ரைலர் கடைசியில ”அந்த ஆள் மட்டும் என் வாழ்க்கையில வரலைன்னா. நானும் இந்த உலகத்துல ஒரு சராசரி மனுஷியா வாழ்ந்திட்டிருப்பேனோ என்னவோ? அந்தப் பிரபஞ்சத்துக்குத்தான் வெளிச்சம்”னு எம்பொண்ணு அழுதுகிட்டு சொல்றதைப் பார்த்து என் ஈரக்கொல நடுங்கிடுச்சி. நாங்க படம் இன்னும் பார்க்கல. ஆனா, இயக்குநர் பார்க்க கூப்ட்டுக்கிட்டே இருக்கார்.
‘இந்தப் படத்தைப் பார்த்து நீங்க எப்படி ஜீரணிப்பீங்கன்னு தெரியல. அதுதான் எனக்கு பயமா இருக்கு’ன்னு சொன்னார். எம்பொண்ணு இல்லாம படத்தைப் பார்க்க தைரியம் இல்லை. ’படம் ரிலீஸ் ஆகும்போது நாமெல்லாம் போலாம்’னு அடிக்கடி பூரிப்பா சொல்லிக்கிட்டே இருப்பா. ஆனா, இப்போ அவ இல்லாம படத்தை பார்க்க முடியும்னு எனக்கு தோணலை.திரையில் அவளைப் பார்க்கிறதுக்காக காத்துட்டிருந்தா.
இப்போ, ரிலீஸும் ஆகப்போகுது.
இதைப் பார்க்க அவ உயிரோட இல்லையேன்னு நினைச்சி அழுவுவதைத் தவிர வேற ஒன்னும் சொல்லத் தெரியலை என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.