பெண் குழந்தைகள் குறித்த சர்ச்சை பேச்சு - சிரஞ்சீவிக்கு வலுக்கும் எதிர்ப்பு
நடிகர் சிரஞ்சீவி பெண் குழந்தைகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிரஞ்சீவி
தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. முன்னதாக அரசியல் கட்சி தொடங்கி நடத்தி வந்த இவர், காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மத்திய அமைச்சராக இருந்தார்.
இவரது மகன் ராம் சரண் நடிகராக உள்ளார். இவரது தம்பி பவன் கல்யாண் ஆந்திரா மாநில துணை முதல்வராக உள்ளார். ஆந்திராவில் செல்வாக்கு செலுத்தும் குடும்பமாக சிரஞ்சீவியின் குடும்பம் உள்ளது.
ஆண் குழந்தை
சமீபத்தில் பிரம்மா ஆனந்தம் என்ற படத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிரஞ்சீவி பெண் குழந்தைகள் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "வீட்டில் என்னை சுற்றி அதிகம் பெண்களே இருக்கிறார்கள். இதனால் மகளிர் விடுதியின் வார்டனை போல உணர்கிறேன். என் வம்சம் தொடர ஒரு ஆண் குழந்தை பெற்று தரும்படி மகன் ராம் சரணிடம் கேட்கிறேன். அவனுக்கு இன்னொரு பெண் குழந்தை பிறந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது" என பேசியுள்ளார்.
சிரஞ்சீவிக்கு ராம் சரண் என்ற மகனும், சுஷ்மிதா, ஶ்ரீஜா என இரு மகள்களும் உள்ளார்கள். சுஷ்மிதா, ஶ்ரீஜாவிற்கு தலா இரு மகள்களும், ராம் சரணுக்கு ஒரு மகளும் உள்ளனர். சிரஞ்சீவி எதார்த்தமாக இதை பேசி இருந்தாலும், ஆண் பெண் சமம் என பாலின சமத்துவம் உருவாகி வரும் நிலையில், ஆண் குழந்தைதான் வாரிசு என்று பேசலாமா என அவரின் பேச்சுக்கு சமூகவலைத்தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.