இனியும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தான் சந்திக்கும் ... அடித்துக் கூறும் பிரசாந்த் கிஷோர்
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்திக்கும் என தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் 024 பொதுத்தேர்தல் மற்றும் குஜராத், இமாச்சல் பிரதேச மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் ஆலோசனை வழங்கினார். இதனால் அவர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக விவாதங்கள் எழுந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய மறுத்ததாக அதன் தேசிய செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூற, அதனை பிரசாந்த் கிஷோரும் தெரிவித்தார்.

மேலும் தான் 'ஜன் சுராஜ்' என்ற பெயரில் அக்டோபர் 2ம் தேதி முதல் 3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பீகாரில் பாதயாத்திரை நடத்த உள்ளதாக பிரசாந்த் கிஷோர் தெரிவிக்க, விரைவில் கட்சி தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே காங்கிரஸ் கட்சியை மீட்டெடுப்பது, தேர்தல் அரசியலில் கட்சியை வெற்றி பாதைக்கு கொண்டு செல்வது, 2024 மக்களவை தேர்தல், குஜராத், இமாச்சல் பிரதேசம், கர்நாடகம் சட்டசபை தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனையாளர் மாநாடு 3 நாட்கள் நடந்தது. மே 13 ஆம் தேதி முதல் மே 15 ஆம் தேதி வரை ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நடந்த இந்த மாநாட்டுக்கு சோனியாகாந்தி தலைமை வகித்தார். ராகுல்காந்தி உள்பட இந்தியாவின் அனைத்து மாநில தலைவர்களும் பங்கேற்றனர்.
இதில் ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி, ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு என பல விஷயங்கள் பற்றி முடிவெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மாநாடு குறித்து பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛ உதய்ப்பூர் சிந்தனையாளர் மாநாடு குறித்து என்னிடம் தொடர்ந்து கருத்துகள் கேட்கப்படுட்டதாகவும், எனது பார்வையில் அந்த மாநாடு அர்த்தமுள்ளவற்றை விவாதிப்பதில் தோல்வியடைந்துள்ளது எனவும் கூறியுள்ளார்.
இதனால் பழைய நிலையே தொடர்கிறது. எனவே குஜராத், இமாச்சல் பிரதேச தேர்தல் தோல்வி வரையாவது காங்கிரஸ் தலைமைக்கு சிறிது அவகாசம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் நடைபெற உள்ள குஜராத், இமாச்சல் பிரதேச மாநிலங்களின் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடையும் என பிரசாந்த் கிஷோர் வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.