செங்குத்தாக விழுந்து விபத்துக்குள்ளான விமானம்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
சீனாவில் கடந்த மார்ச் மாதம் நடந்த விமான விபத்தில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஒரு விமானம் 132 பயணிகளுடன் குன்மிங்கில் இருந்து குவாங்சோ நோக்கி கடந்த மார்ச் 21 ஆம் தேதி சென்றது. குவாங்ஸி மாகாணத்தில் மலைப்பகுதியில் விமானம் மொத்தம் 123 பயணிகள், 2 பைலட், 7 விமான ஊழியர்கள் என்று 132 பேருடன் சென்ற நிலையில் விபத்துக்குள்ளானது.
இது சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத மிக மோசமான விபத்து என கூறப்படும் நிலையில் இந்த விபத்து சந்தேகத்தை கிளப்பியது. அதற்கு காரணம் வழக்கமான விமான விபத்தை போல அல்லாமல் செங்குத்தாக விமானம் பூமியை நோக்கி வந்ததே ஆகும்.
அதில் பயணித்த 132 பேரும் பலியான நிலையில் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் போயிங் விமானத்தில் பாதுகாப்பு குறைபாடு இருந்தால் மற்ற விமானங்களுக்கு இதை பற்றி தெரிவிக்க வேண்டும்.அவ்வாறு செய்தால் பாதுகாப்பு விதிமுறைகளில் மாற்றங்களை செய்ய முடியும். ஆனால் அப்படி அந்த விமானத்தில் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான காக்பிட்டில் விமானிகள் பேசிக்கொண்டதை பார்த்தால் எந்த விதமான கோளாறும் இருப்பது போல தெரியவில்லை. அதேபோல கருப்பு பெட்டியிலும் அதற்கான ஆதாரம் இல்லை என கூறப்பட்டுள்ளது. விமானம் நல்ல நிலையில் உள்ள போது வேண்டுமென்றே யாரோ இப்படி செய்திருக்கலாம் என்றும், இதை முழுமையாக விசாரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை அமெரிக்காவை சேர்ந்த மூத்த அதிகாரிகளின் ஆய்வின் அடிப்படையில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.