தலைவலியால் அவதிப்பட்ட நபர் - ஸ்கேன் செய்து பார்த்ததில் காத்திருந்த அதிர்ச்சி
தீராத தலைவலியால் அவதிப்பட்ட நபருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது அதிர்ச்சி தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். முழித்திருந்தாலும்,தூங்கினாலும் அவருக்கு தலைவலி ஏற்படவே காரணம் புரியாமல் இருந்துள்ளது. இதனிடையே அந்த நபர் இதுதொடர்பாக மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
எம்ஆர்ஐ ஸ்கேன் செய்து பார்த்ததில் அவரது மண்டை ஓட்டில் புல்லட் ஒன்று சிக்கி இருப்பது தெரிய வந்தது. 28 வயதாகும் அவர் தனக்கு 8 வயது இருந்தபோது, தன்னுடைய சகோதரரும், தானும் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் அப்போது அவர் பயன்படுத்திய ஏர்கன் மூலமாக இந்த புல்லட் பாய்ந்திருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
ஆனால் தலை முடியை வைத்து மறைத்து தனது பெற்றோருக்கு தெரியாமல் பார்த்துக் கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். இவர் இவ்வளவு நாட்களாக இந்த புல்லட்டுடன் எப்படி உயிர் வாழ்ந்தார் என்பது ஆச்சரியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புல்லட் மண்டை ஓட்டை தாண்டி உள்ளே இறங்காமல் வெளியில் இருந்ததால் பெரிய அளவில் ஆபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
அதேசமயம் பொதுமக்கள் நாள்பட்ட தலைவலி இருந்தால் அதை புறக்கணிக்க கூடாது என்றும் உரிய மருத்துவ பரிசோதனை செய்து, சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.