தமிழுக்கு புறக்கணிப்பு .. சீன மொழிக்கு ஆதரவா? இலங்கைக்கு சீமான் கண்டனம்!
இலங்கையின் அலுவல் பணிகளில் தமிழை புறக்கணித்துவிட்டு சீன மொழியை புகுத்துவது அதிர்ச்சியளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சீனா, கொழும்பு துறைமுகத்தை ஒட்டி, 10, 228 கோடி ரூபாய் மதிப்பில் நகரம் ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த துறைமுக நகரத்தின் கட்டுப்பாட்டை முழுமையாக சீனாவே வைத்திருக்கும் என்பதால், இங்கு சீனா, ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய மூன்று மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சீனாவின் நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற கொழும்பு துறைமுக நகர் திட்டத்திலுள்ள பெயர் பலகைகளில் தொடங்கி நாட்டின் கடவுச்சீட்டு வரை எல்லாவற்றிலும் சிங்களம், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளுக்கு இடமளித்து, தமிழ் மொழியை மட்டும் திட்டமிட்டுப் புறக்கணித்து வருவது தமிழர்களிடம் கடும் கொந்தளிப்பையும், பெருஞ்சினத்தையும் ஏற்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அலுவல் பணிகளிலும், கடவுச்சீட்டிலும் தமிழைப் புறக்கணித்துவிட்டு சீன மொழியை உட்புகுத்துவதா?https://t.co/yxJyCaLoe4 pic.twitter.com/N8XScwusY6
— சீமான் (@SeemanOfficial) May 25, 2021
தமிழர்களின் நிலங்களை சிங்களமயமாக்கிவிட்டு, ஒட்டுமொத்த நாட்டையும் சிங்களர்களின் தேசமாக மாற்ற முயலும் இலங்கை அரசின் சதிச்செயலையும், இனவெறி நடவடிக்கைகளையும் இனிமேலாவது பன்னாட்டுச்சமூகமும், அனைத்துலக நாடுகளும் உணர்ந்துகொள்ள வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.