மீண்டும் ஊரடங்கு; சீனாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - பதற்றத்தில் உலக நாடுகள்
சீனாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் உலகளவில் பொருளாதாரம் மேலும் பாதிப்புக்கு உள்ளாகும் என அஞ்சப்படுகிறது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று
கடந்த 3 வாரங்களில் 2.53 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தினமும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

சீனாவில் பூஜ்ஜியம் கோவிட் திட்டத்தின் கீழ் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. தொடர் கொரோன தொற்று அதிகரிப்பால் உற்பத்தி உள்ளிட்ட வணிகச் செயல்பாடுகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
சீனா உலகின் மிகப் பெரிய வர்த்தக நாடாகவும், ஆசியாவின் மிகப் பெரிய சந்தையாகவும் இருந்து வருகிறது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வு என பல வகையிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
பதறும் உலக நாடுகள்
இதன் தாக்கம் உலக பொருளாதாரத்திலும் பிரதிபலிக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். ஒரு பக்கம் உக்ரைன் மீதான ரஷ்யா போர், பணவீக்கம் ஆகியவை காரணமாக உலக பொருளாதாரம் தடுமாறி வரும் நிலையில் தற்போது சீனாவில் கடும் கட்டுப்பாடுகளால் அந்நாட்டு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதாலும் அங்கு உற்பத்தியானது தடைபட்டுள்ளதாலும் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெய்ஜிங்கின் சாயோயாங் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் வாடிக்கையாளர்கள் உணவருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உணவகங்கள் சாலையோரங்களில் பார்சல் சேவைகளை வழங்கி வருகிறது.