சீனாவின் பிளான்.. AI மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி - எச்சரிக்கும் மைக்ரோசாஃப்ட்!
ஏஐ தொழில்நுட்பம் மூலம் இந்திய தேர்தலை சீர்குலைக்க சீனா சதி செய்வதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சதி திட்டம்
2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.
இந்நிலையில் ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் மூலம் தேர்தலை சிதைக்க சீனா சதி செய்வதாக பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் எச்சரித்துள்ளது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான அரசியல் விளம்பரங்கள், டீப் ஃபேக் ஆடியோக்கள், வீடியோக்கள் வாக்காளர்களை திசைதிருப்பும் என்றும் எச்சரித்துள்ளது.
எச்சரிக்கை
மேலும், சமூக வலைத்தளங்களில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட கருத்துகளைப் பரப்பி பொதுமக்களின் எண்ண அலைகளை மாற்றலாம். அதேபோல வேட்பாளர்களின் அறிக்கைகளும், நிலைப்பாடுகளும் தவறாக பரப்பப்பட்டு, மக்களை தவறாக வழிநடத்தப்படக்கூடும்.
எனவே அந்த செய்திகளை ஆய்வு செய்யப்படாமல் அனுமதிக்கப்பட்டால் வாக்காளர்கள் சரியான முடிவு எடுக்காமல் போவதற்கான சாத்தியம் உள்ளது" என்று மைக்ரோசாஃப்ட் நுண்ணறிவு குழு எச்சரித்துள்ளது.
இந்தியா மட்டும் இன்றி அமெரிக்கா, தென்கொரியா நாடுகளின் தேர்தலிலும் ஆதிக்கம் செலுத்தி முடிவுகளை தங்கள் நாட்டிற்கு சாதகமான வகையில் சீனா மாற்றலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.