இந்தியாதான் எனது வீடு சீனாவுக்கு போகமாட்டேன் : தலாய்லாமா உறுதி
சீனாவுக்குத் திரும்ப விருப்பம் இல்லையென்றும் இந்தியாவிலேயே வசிக்க விரும்புவதாகவும் தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
தலாய்லாமா கருத்து
காங்க்ராவில் செய்தியாளர்களிடம் பேசிய தலாய்லாமா, சீனாவுக்குத் திரும்புவதில் அர்த்தமில்லை. நான் இந்தியாவை விரும்புகிறேன். இதுதான் சிறந்த இடம் எனக் கூறினார் மேலும், காங்க்ராவில் நான் வசிக்கவேண்டும் என்பது நேருவின் விருப்பம், இந்த இடமே எனது நிரந்தர வசிப்பிடம் என்று அவர் புன்னகையுடன் கூறினார்.
இந்தியாதான் எனது வீடு
86 வயதான தலாய் லாமா, திபெத்திய பௌத்தர்களின் ஆன்மீகத் தலைவர் ஆவார். இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1950-ல், ஆயிரக்கணக்கான சீன வீரர்கள் திபெத்தை ஆக்கிரமித்து, அதை சீனாவின் ஒரு பகுதியாக அறிவித்தனர்.
அடுத்த சில ஆண்டுகளில், திபெத்தின் மீது சீனா தனது பிடியை இறுக்கியது. அதன் ஆட்சிக்கு திபெத்தில் எதிர்ப்பு பரவத் தொடங்கியது. நிலைமை மேலும் மேலும் மோசமாக மாறியதால், தலாய் லாமா, 1959-ல் தனது பிறந்த மண்ணை விட்டு அண்டை நாடான இந்தியாவுக்குத் தப்பி வந்தார்.
பிரதமர் ஜவஹர்லால் நேரு அவருக்கு அரசியல் தஞ்சம் அளித்தார், அன்றிலிருந்து அவர் ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்க்ரா மாவட்டத்தில் வசித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.