ஹோட்டலில் பெட்ரோலிய வாயு கசிந்து வெடிவிபத்து - 31 பேர் உயிரிழப்பு!
சீன ஹோட்டலில் பெட்ரோலிய வாயு கசிந்ததால் 31 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து
சீன நாட்டின் வடமேற்கு பகுதியில் யின்சுவான் நகரத்தில் ஃபுயாங் பார்பெக்யு என்ற உணவகம் இயங்கிவருகிறது. இந்த உணவகத்தில் நேற்று எல்.பி.ஜி எனப்படும் பெட்ரோலிய வாயு கசிவினால் வெடி விபத்து ஏற்பட்டது.
அதில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும், 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
அதிபர்
இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், ''காயமடைந்தவர்களின் சிகிச்சை நடவடிக்கைகளை முடுக்கிவிடவும், முக்கியமான துறைகளின் பாதுகாப்பிற்கு வலிமையூட்டவும், மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்'' உத்தரவிட்டார்.
அதன்பிறகு, சீனாவின் அவசரக்கால நிர்வாக மேலாண்மை அமைச்சரவை, 100-க்கும் மேற்பட்ட வீரர்களை 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது.
மேலும், உள்ளூர் அதிகாரிகள் உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், உயிர் பலிகளை குறைக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கோரியிருந்தது. பின்னர் இன்று காலையில் மீட்பு பணிகள் முடிவடைந்ததாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.