கொரோனா தொடக்கம் பற்றி விசாரிக்க வந்த WHO.. அனுமதி மறுத்த சீனா
இன்று உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸ் முதலில் பதிவாகியது சீனாவில் தான். சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவானது. இந்நிலையில் கொரோனா பற்றிய தகவல்களை சீனா வெளிப்படையாக வழங்கவில்லை.
சீனா வெளிப்படையாக இருந்திருந்தால் இத்தகைய பேரிடரை தவிர்த்திருக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. மேலும் உலக சுகாதார நிறுவனமும் சீனாவுக்கு சாதகமாக நடந்து கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது.
கொரோனா பரவியது பற்றி வெளிப்படையான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் குழு கொரோனா பரவிய பகுதிக்குச் சென்று விசாரிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது சீன அரசு அதற்கு அனுமதி மறுத்துள்ளது. இது மிகவும் ஏமாற்றம் தருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச விசாரணைக்கு சீனா முழுமையாக ஒத்துழைக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.