ஊழியர்களை நெருப்பை விழுங்க வைத்த நிறுவனம் - இப்படி ஒரு காரணமா?
சீன நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களை நெருப்பை விழுங்க வைத்துள்ளது.
தன்னம்பிக்கை பயிற்சி
பெரும்பாலான நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் செயல்திறனை மேம்படுத்த, போட்டிகள் நடத்துவதும் சில பயிற்சிகள் வழங்குவதும் வழக்கம்.
இதே போல் சீனாவில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஊழியர்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட பயிற்சி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
நெருப்பை விழுங்கவும்
வடகிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பயத்தை போக்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும் 2 நாள் பயிற்சி வகுப்பு நடத்தியுள்ளது. இதில் 60 ஊழியர்களை 6 அணிகளாக பிரித்து பயிற்சி வழங்கியுள்ளனர். இந்த பயிற்சியின் போது ஊழியர்களை நெருப்பை விழுங்க கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய அந்த நிறுவனத்தின் பெண் ஊழியரான ரோங்ராங், பஞ்சில் நெருப்பை வைத்து அதை விழுங்குமாறு கூறினார்கள். எனக்கு தயக்கமாக இருந்தாலும், இதை செய்யாவிட்டால் வேலை போய்விடுவோமோ என்ற அச்சத்தில் நான் உட்பட பலரும் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு தொழிலாளர் சட்டங்களை மீறுவதாகவும், நிறுவனத்திற்கு எதிராக அதிகாரிகளிடம் புகார் அளிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கண்டனம்
இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இது போன்ற நிகழ்வுகளை முறையாக பயிற்சி பெற்றவர்கள்தான் செய்ய முடியும். மற்றவர்கள் செய்தால் ஆபத்தில் முடியும் என நெட்டிசன்கள் அந்த நிறுவனத்திற்கு கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக சீன நிறுவனம் ஒன்று விளையாட்டில் தோற்ற தனது ஊழியர்களை இரவு நேரத்தில் தெருவில் ஊர்ந்து செல்ல கட்டாயப்படுத்தியது. மற்றொரு நிறுவனம் ஊழியர்களின் தைரியத்தை அதிகரிக்க, பொது இடங்களில் அறிமுகமில்லாதவர்களை கட்டிப்பிடிக்கவும், குப்பைத் தொட்டிகளை முத்தமிடவும் செய்தது.