இந்திய எல்லையில் 30 விமான நிலையம் - சீனாவின் மாஸ்டர் பிளான்
இந்திய எல்லைக்கு வீரர்கள் எளிதாக வந்து செல்வதற்கு வசதியாக இந்திய எல்லையில் உள்ள பகுதிகளில் 30 விமான நிலையங்களை கட்டுவதற்கான நடவடிக்கையில் சீனா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய - சீன எல்லையில் கடந்தாண்டு இருநாட்டு வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு பின், இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன்பின் சீனாவுக்கு எதிரான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.
இதனிடையே இந்தியாவை ஒட்டிய எல்லைப் பகுதிகளில் ராணுவம் மற்றும் சிவில் சர்வீசஸ் உள்கட்டமைப்பை சீனா அரசு முடுக்கிவிட்டுள்ளது.அதன்படி திபெத் மற்றும் சின்ஜியாங் மாகாணங்களில் சுமார் 30 விமான நிலையங்கள் கட்டுவதற்கான செயல்வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் திபெத்தின் தலைநகர் லாசாவையும், இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் அருகே அமைந்துள்ள திபெத்திய எல்லை நகரமான நிங்சியையும் இணைக்கும் அதிவேக புல்லட் ரயிலை அறிமுகம் செய்தது.
எல்லைப் பகுதிகளில் சிவில் விமானப் போக்குவரத்தை விரிவாக்கம் செய்வதால், சீன படையினர் மற்றும் முன்னாள் படைவீரர்கள் எளிதாக எல்லைகளுக்கு சென்று வரமுடியும் என்பதால் இதற்கு இந்தியா தரப்பில் பதிலடி கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிது.