ஒமைக்ரான் பரவல்: 1.40 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யும் சீனா
ஒமைக்ரான் பரவல் அச்சுருத்தல் காரணமாக சுமார் 1.40 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய சீனா முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. அந்த வகையில் கொரோனாவின் பிறப்பிடமான சீனாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
சீனா தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்த அந்த நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் பீஜிங்குக்கு அருகில் உள்ள துறைமுக நகரமான தியான்ஜினில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இவர்களில் 2 பேருக்கு புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த மாத மத்தியில் முதன்முதலாக ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது.
இதே தியான்ஜின் நகரில்தான். இதன்காரணமாக தியான்ஜின் நகரில் ஒமைக்ரான் பரவல் வேகமெடுக்கும் என்கிற அச்சம் எழுந்துள்ளது.
இதைதொடர்ந்து, தியான்ஜின் நகரின் மொத்த மக்கள் தொகையான சுமார் 1 கோடியே 40 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
மொத்தம் உள்ள 16 மாவட்டங்களில் 4 மாவட்டங்களில் முழுமையாக பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், எஞ்சிய 12 மாவட்டங்களில் இன்றைக்குள் பரிசோதனை நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.