வடிவேலு படக்காட்சிகளை மிஞ்சும் கொள்ளை சம்பவம் - மிளகாய் பொடி தூவிவிட்டு எஸ்க்கேப்பான கொள்ளையர்கள்
கடையின் பூட்டை உடைத்து 70 ஆயிரம் பணத்தை திருடிச்சென்ற கொள்ளையர்கள் சிக்காமல் இருக்க மிளகாய் பொடியை தூவி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் டவுன் நடுப்பேட்டை ஆதிமூலம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜாபர், இவர் காந்தி ரோடு பகுதியில் சோபா கடை வைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி சென்றுவிட்டு காலையில் கடையைத் திறக்க வந்த ஜாபர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு மிளகாய் தூள் தூவி இருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது கடையில் பணம் வைத்திருந்த டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 70 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து ஜாபர் குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி,சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்டோர் திருட்டு நடைபெற்ற கடையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.
நகரின் மையப் பகுதியில் 24 மணி நேரமும் ஜனநடமாட்டம் இருக்கும் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த திருட்டு சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் மோப்ப நாயிடம் சிக்காமல் தப்பிக்க மிள்காய் பொடி தூவிவிட்டு கொள்ளையடித்து சென்றிருப்பது வடிவேலு படக்காட்சிகளையே மிஞ்சும் வகையில் இருக்கிறது.