அதிக குழந்தை பெற்றால் ரூபாய் 1 லட்சம் ஊக்கத்தொகை - மிசோரம் அறிவிப்பு
அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என மிசோரம் அமைச்சர் அறிவித்துள்ளார்.
மிசோரம் பல்வேறு மிசோ பழங்குடியினரை கொண்ட மாநிலமாகும்.சுமார் 21,087 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த மாநிலம் உள்ளது. இதில் 91% காடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மிசோரமின் மக்கள் தொகை 1,091,014 ஆகும்.
சதுர கிலோமீட்டருக்கு 52 நபர்கள் மட்டுமே உள்ள மிசோரம், அருணாச்சல பிரதேசத்திற்கு அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். அருணாசலபிரதேசம் சதுர கி.மீ.க்கு 17 நபர்களின் மக்கள் அடர்த்தியைக் கொண்டுள்ளது. தேசிய சராசரி சதுர கி.மீ.க்கு 382 ஆகும்.
மிசோரத்தில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளுடன் வாழும் பெற்றோருக்கு ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ராய்டே அறிவித்துள்ளார்.
அவரது தொகுதியான ஐஸ்வால் பகுதியில் அதிக குழந்தைகளுடன் வசித்து வரும் பெற்றோருக்கு, ஊக்கத்தொகை மட்டுமின்றி சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும் போது எங்கள் குறைந்து வரும் மக்கள்தொகை வளர்ச்சி மற்றும் கருவுறாமை விகிதம் பல ஆண்டுகளாக கவலைக்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. மிசோரம் அதன் மக்கள்தொகை படிப்படியாகக் குறைந்து வருவதால் பல்வேறு துறைகளில் வளர்ச்சியை அடையமுடியவில்லை. குறைந்த மக்கள் தொகை என்பது ஒரு தீவிரமான பிரச்சினை மற்றும் சிறிய சமூகங்கள் அல்லது மிசோஸ் போன்ற பழங்குடியினருக்கு உயிர்வாழவும் முன்னேறவும் தடையாக உள்ளது என்று கூறினார்.
மிசோரத்தில் மக்கள் தொகை படிப்படியாக குறைந்து வருவதால், மக்கள் தொகை பெருக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதே மாநிலத்தைச் சேர்ந்த சியோனா சனா என்பவர் 39 மனைவிகள், 94 குழந்தைகள், 14 மருமகள், 33 பேரக்குழந்தைகளுடன் உலகின் மிகப்பெரிய குடும்பத்திற்கு தலைமை தாங்கி வருகிறார்.
எவ்வாறாயினும், மிசோரமின் அண்டை மாநிலமான அசாம் வேறு பாதையில் செல்கிறது. மிசோரம் அதன் மக்கள்தொகையை அதிகரிக்க முற்படுகையில், அசாம் அதைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறது . அசாம் முதல் மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா சமீபத்தில் தனது அரசு படிப்படியாக இரண்டு குழந்தைகொள்கையை அமல்படுத்த போவதாக அறிவித்தார்.
2019 ஆம் ஆண்டில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் 2021 ஜனவரி முதல் அரசு வேலைகளுக்கு தகுதி பெற மாட்டார்கள் என்று மாநில நிர்வாகம் முடிவு செய்து உள்ளது.