ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்த 2 குழந்தைகள் பலி
புதுச்சேரி அருகே ஆழ்துளை கிணறுக்காக தோண்டப்பட்ட பக்கவாட்டு குழியில் விழுந்த 2 குழந்தைகள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பெரம்பை கிராமத்தில் கொத்தனார் ராமு என்ற சுரேஷ் தனது மனைவி இனிதா, மகன்கள் லெவின், ரோகித் ஆகியோருடன் வசித்து வந்தார். இதனிடையே ராமுவின் பக்கத்து வீட்டில் இரு தினங்களுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இதன் அருகே பக்கவாட்டில் 5 அடிக்கு குழி தோண்டி வடிகால் அமைத்தனர். அதன் வழியாக ஆழ்துளை கிணறு தோண்டும் போது வெளியேறிய சகதி கலந்த கழிவுநீர் விடப்பட்டது.
கிணறு தோண்டி முடித்ததும் அதை மூடி வைத்து விட்டு தொழிலாளர்கள் சென்று விட்ட நிலையில் பக்கவாட்டில் இருந்த 5 அடி குழி மூடப்படாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மதிய நேரத்தில் லெவின், ரோகித் அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த குழிக்குள் இருவரும் தவறி விழுந்துள்ளனர்.
அப்பகுதியில் யாரும் இல்லாததால் குழந்தைகள் குழிக்குள் விழுந்ததை கவனிக்கவில்லை. இதனிடையே விளையாடச் சென்ற குழந்தைகள் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் இனிதா அவர்களை தேடிச் சென்றார். பல்வேறு இடங்களில் தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது மாடு மேயக்கச் சென்ற பெண் ஒருவர் ஆழ்துளை கிணறு அமைத்த பகுதி வழியாக நடந்து சென்றபோது குழந்தைகளின் கால்கள் குழிக்கு வெளியே தெரிவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார். சம்பவ இடத்திற்கு வந்த ராமு, இனிதா இருவரும் லெவின், ரோகித் உடலை கண்டு கதறி அழுதனர்.
தகவல் அறிந்து ஆரோவில் போலீசார் அங்கு விரைந்து வந்து 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.