இறந்த தாயின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுத்த பிள்ளைகள் - நெகிழ்ச்சி சம்பவம்
இறந்த தாயின் உடலை மருத்துவக் கல்லூரிக்கு பிள்ளைகள் தானமாக கொடுத்த சம்பவம் அப்பகுதியில் இருப்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி (65). இவர் கடந்த 2016-ம் ஆண்டு உடல்தானம் செய்வதாக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரியில் பதிவு செய்திருந்தார்.
நேற்று முன்தினம் சுப்புலட்சுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் அவரது உடலை சுப்புலட்சுமியின் மகன் மற்றும் மகள்கள், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரிக்கு மாணவர்களின் படிப்புக்காக தானமாக ஒப்படைத்தனர்.
அதனையடுத்து, நேற்று மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் சுப்புலட்சுமியின் உடலை பரிசோதனை செய்து பின்னர் உடலை தானமாக பெற்றுக் கொண்டனர். மருத்துவர்கள் மூதாட்டியின் உடலை மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக பயன்படுத்த இருப்பதாக தெரிவித்தார்கள்.

இது குறித்து இறந்த சுப்புலட்சுமியின் மகள் முத்துகுமாரி கூறுகையில் தாயின் உடலை தானம் செய்து இருப்பது நிம்மதி கிடைத்துள்ளது. இது போன்று அனைவருக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்றார்.