நடுவானில் பறந்த விமானத்தில் பிரவசம்- அழகான குழந்தையை பெற்றெடுத்த தாய்!

baby mother flight birth jaipur
By Jon Mar 17, 2021 04:13 PM GMT
Report

ஜெய்பூருக்கு பறந்து கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், சக பயணியான மருத்துவர் தலைமையில், விமான கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன் அந்த பெண்ணுக்கு பிரசவம் நடந்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களுருவிலிருந்து இன்று அதிகாலை ஜெய்ப்பூருக்கு விமானத்தில் சென்று கொண்டிருந்த போது தங்கள் பயணி ஒருவருக்கு பிரசவம் நடந்ததாகவும், அதில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும் இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிரசவம் பார்த்த மருத்துவருக்கு ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் தலைநகர் பெங்களூருவிலிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு 6E 460 என்ற விமானம் புறப்பட்டு சென்றது. இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது அதில் பயணம் செய்த பெண் ஒருவருக்கு பிரசவ வலி வந்துள்ளது.

அப்போது அவர் பிரசவ வலியால் துடித்துள்ளார். இது குறித்து கேபின் குழு ஊழியர்களிடம் உதவி கோரினார். அதே நேரத்தில் அந்த விமானத்தில் பயணித்த மருத்துவர் சுபகானா நசீர் அப்பெண்ணுக்கு சிகிச்சை அளிக்க முன்வந்துள்ளார். கேபின் குழு ஊழியர்களின் உதவியுடன், மருத்துவர் சுபகானா நசீர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்திருக்கிறார்.

இதில் அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது. உடனடியாக ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவல் அளித்தார் விமானி. மருத்துவ குழுவுடன், ஆம்புலன்ஸும் தயாராக வைக்கும் படி கூறியுள்ளார். இந்த விமானம் பிறந்த குழந்தையுடன் காலை 8 மணிக்கு ஜெய்ப்பூரை வந்து இறங்கியது.

தக்க நேரத்தில் உதவி செய்த மருத்துவர் சுபகானா நசீருக்கு இண்டிகோ நிறுவனத்தார் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதனிடையே இந்த நிகழ்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இண்டிகோ நிறுவனம், 6E 460 விமானத்தில் டிக்கெட் இல்லா பயணியும், அவரின் தாயும் நலமுடன் உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

இதேபோல் கடந்த ஆண்டு அக்டோபரில் டெல்லியிலிருந்து பெங்களூரு சென்ற இண்டிகோ விமானத்தில் ஆண் குழந்தை நடுவானில் பிறந்தது குறிப்பிடத்தக்கது.