கை அகற்றப்பட்ட குழந்தை உயிரிழப்பு - மருத்துவமனை மீது புகார் அளித்த பெற்றோர்
சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கை அகற்றப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
கை அகற்றம்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த தஸ்தகீர்-அஜீசா தம்பதிகளுக்கு பிறந்த குழந்தை பல்வேறு உடல்நல கோளாறுடன் பிறந்துள்ளது. தலையில் நீர் வழிந்ததால் சிகிச்சைக்காக, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த ஜூலை 1-ஆம் தேதி சிகிச்சையில் இருந்த குழந்தையின் வலது கை அழுகியதால், குழந்தையின் அந்த கை அகற்றப்பட்டது. தவறான சிகிச்சையால்தான் குழந்தையின் கை பாதிக்கப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த 3 மருத்துவர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
குழந்தை உயிரிழப்பு
இந்நிலையில், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை உயிரிழந்தது. குழந்தையின் உயிரிழப்புக்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.