8 மாத குழந்தை மீது கொடூர தாக்குதல் - சிசிடிவியால் சிக்கிய குழந்தை பராமரிப்பாளர்
குஜராத்தில் குழந்தை பராமரிப்பாளர் பெண் ஒருவர் கோபத்தில் 8 மாத குழந்தையை கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் மித்தேஷ் பட்டேல். இவரும் அவரது மனைவியும் தனியார் அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பார்த்துக்கொள்வதற்காக கடந்த செப்டம்பர் மாதம் குழந்தை பராமரிப்பாளரை நியமித்துள்ளனர்.
இதனிடையே நேற்று முன்தினம் பட்டேல் தனது அலுவலகத்தில் இருந்த போது அவரது தாயாரிடம் இருந்து அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் இரட்டையர்களில் ஒரு குழந்தை அழுதுக்கொண்டே திடீரென மயங்கிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மருத்துவமனை அழைத்துச்சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், குழந்தையின் மூளையில் இரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து என்ன நடந்தது என்பதை அறிய பட்டேல் குடும்பத்தினர் வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டுள்ளனர். அதில் குழந்தை பராமரிப்பாளர் அந்த குழந்தையின் காதை திருகி அடித்து துன்புறுத்துவதுடன், குழந்தையை படுக்கையில் தூக்கி வீசும் காட்சிகளை கண்டு அதிர்ந்துள்ளனர்.
நடந்த சம்பவம் குறித்து மித்தேஷ் பட்டேல் காவல் நிலையல் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையை மேற்கொண்ட போலீசார் கோமல் டெண்டேல்கார் என்ற குழந்தை பராமரிப்பாளர் குழந்தையை துன்புறுத்துவது சிசிடிவி காட்சிகள் மூலம் உறுதியானதால் அவரை கைது செய்தனர்.
அக்கம்பக்கத்தினர் குழந்தை பராமரிப்பாளரிடம் குழந்தைகள் இருக்கும் போது, அதிகளவில் அழுகை சத்தம் கேட்பதாக புகார் அளித்ததன் பேரில் மித்தேஷ் சில தினங்களுக்கு முன்பு தான் சிசிடிவி கேமராவை வீட்டில் பொருத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.