மதுரையைச் சுற்றி வரும் குழந்தை விற்பனை மர்மங்கள்..நடப்பது என்ன?
மதுரையில் குழந்தை விற்பனை அதிகரித்துள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை ஆத்திக்குளம் பகுதியில் இயங்கி வந்த இதயம் அறக்கட்டளை காப்பகத்தில் தங்கியிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குழந்தைகள், கொரோனாவால் இறந்ததாக போலிச் சான்றிதழ் பெற்று, குழந்தையில்லா தம்பதியினர்க்கு விற்கப்பட்ட வழக்கில் அதன் காப்பாளர் சிவக்குமார் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்ட நிகழ்வு மதுரை மக்களை சுழன்றடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மதுரையில் மற்றொரு மனநிலைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் 3 பெண் குழந்தைகள் மூன்று தம்பதியர்களிடமிருந்து மீட்கப்பட்டு ஏழு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
மதுரை மாவட்ட குழந்தைகள் நலக்குழுவின் தொலைபேசி எண்ணிற்கு சனிக்கிழமை காலை வந்த தகவலின் அடிப்படையில், அதன் தலைவர் டாக்டர் விஜய் சரவணன், மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார்செய்ய, அவரது உத்தரவின் பேரில், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரை அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவினர்.
மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த அந்தக் குறிப்பிட்ட வீட்டினுள் நுழைந்த குழுவினர் அங்கிருந்த சுகன்யா - கணேஷ் குமார் தம்பதியினரிடம் தங்களுக்கு வந்த தகவல் குறித்து விசாரணையை மேற்கொண்டதில், தனது வீட்டில் உள்ள 4 வயது குழந்தை குறித்து உண்மையை ஒப்புக் கொள்ள, சுகன்யா சொன்ன தகவல்கள் பல அதிரடி திருப்பங்களுடன் பயணிக்க ஆரம்பித்தது.
சுகன்யாவின் மாமன் மகள் சித்ரா என்பவர்க்கு பிறந்த பெண் குழந்தைதான் இது என்றும், முதல் கணவர் இறந்து விட சித்ரா மனநிலைப் பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது கணவர் முருகேசன் என்பவருடன் மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் தெருவோரத்தில் வசித்து வருவதாகக் கூறி உள்ளார்.
குழந்தையையை சுகன்யாவிடம் இருந்து மீட்ட போலீசார், அவரையும் அழைத்துக் கொண்டு சித்ராவின் இருப்பிடத்திற்கு செல்லும் போது, சுகன்யாவிடமிருந்து உண்மைகள் வெளிவரத் துவங்கின.
2வது கணவன் முருகேசனோடு வாழ்ந்து வரும் தனது மாமன் மகள் சித்ராவிற்கு முதல் குழந்தை இறந்து பிறந்ததாகவும், 2வது பிறந்த குழந்தை காணாமல் போய் அந்த மிஸ்சிங் வழக்கு ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பதாகவும் சொன்னார்.
மூன்றாவது பிரசவத்தில் சித்ராவிற்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்ததாகவும், அவர் மனநிலைப் பாதிக்கப் பட்டவர் என்பதால், குழந்தைகளை வளர்க்க சிரமம் எனக் கருதிய, சித்ராவின் அத்தையான தனது தாய் இரு குழந்தைகளை சுகன்யாவிடம் வளர்க்கக் கொடுத்ததாகவும், அதில் ஒரு குழந்தையை தனது தோழி செல்லூர் செல்வி - மாயக் கண்ணன் தம்பதியிடம் கொடுத்ததாகவும் பல்வேறு திருப்பங்களை போலீசாரிடம் சொல்லி உள்ளார்.
அடுத்ததாக, இரு வருடங்கள் கழித்து 5வது பெண் குழந்தை சித்ராவிற்கு பிறக்க, அதனை தனக்கு தெரிந்த, முத்துப் பட்டியைச் சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதியினரான பாலச்சந்திரன் - கலாநிதிக்கு கொடுத்ததாக சொல்ல, போலீசார் விரைந்து செயல்பட்டு மற்ற இரண்டு குழந்தைகளையும் மீட்டு அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு அனைவரையும் விசாரணைக்கு அழைத்து வந்தனர்.
மதுரை காவல் இணை ஆணையாளர் தங்கத் துரை மற்றும் உதவி ஆய்வாளர் சக்கரவர்த்தி நேரடி விசாரணையில், 5வது பெண் குழந்தையை வளர்க்கும் பாலச்சந்திரன் - கலாநிதி தம்பதியினர், முத்துப்பட்டி புரோக்கர் சரவணன் என்பவர் மூலம் அந்தக் குழந்தை தங்களுக்குப் பிறந்ததாக, 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்து, போலிப் பிறப்புச் சான்றிதழ் பெற்றுள்ளதும் தெரிய வந்தது.
விசாரணையின் முடிவில் போலிப் பிறப்புச் சான்றிதழ் பெற்றுத் தந்த புரோக்கர் சரவணன், குழந்தைகளை வளர்த்து வந்து மூன்று தம்பதியினர் என ஏழு பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட தாய் சித்ராவை சமூக நலத்துறையினரிடம் ஒப்படைத்த போலீசார், மீட்டெடுத்த பெண் குழந்தைகள் மூவரையும் மாவட்டக் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் அவிழ்க்கப்படாத பல முடிச்சுகளுக்கு விடையானது தொடர் விசாரணையில் தான் தெரிய வரும். தொடர்ந்து மன நலப் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் குறி வைக்கப்படுவதன் காரணம் என்ன? இந்த வழக்கில் சுகன்யா தெரிவித்துள்ள தகவல்கள் உண்மையா? போலிச் சான்றிதழ் பெற்று தந்த புரோக்கர் சரவணனின் பின்னணி என்ன? 2வது கணவன் முருகேசனின் செயல்பாடுகள் என்ன? சித்ராவின் காணாமல் போன 2வது குழந்தையின் நிலை என்ன? குழந்தைகள் கடத்தல் மற்றும் விற்பனையில் மதுரையில் இயங்கும் குழுக்கள் நெட்வொர்க் அமைத்து செயல்படுகின்றனவா? குழந்தைகள் விற்பனை என்பதனையும் தாண்டி, உறுப்புத் திருட்டு நோக்கங்கள் எதுவும் உள்ளனவா? மதுரையையும் தாண்டி மாநிலங்களுக்கு இடையேயும் இந்த வியாபாரம் நடைபெறுகிறதா? இவற்றிற்கு விடை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு காவல்துறையையும், தமிழக அரசையுமே சாரும்.
செய்தியாளர் : ஹமீது கலந்தர்