தாயே 7 வயது பெண் குழந்தையை ரூ.10 லட்சத்துக்கு விற்ற சம்பவத்தால் பரபரப்பு!
தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சத்துக்கு தனது 7 வயது பெண் குழந்தையை தாயே விற்றுள்ளார். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். இவர் கூலித் தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு 10 வயதிலும், 7 வயதிலும் இரண்டு பெண் குழந்தை உள்ளனர். ஒரு ஆண் மகனும் உள்ளனர்.
சுமதி சேலம் முல்லைநகர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணன் (52) என்பவரின் வீட்டில் வேலை செய்து வருகிறாள். கிருஷ்ணன் அப்பகுதியில் ரோட்டரி சங்கத்தின் செயலாளராக இருக்கிறார். வீட்டு வேலைக்கு செல்லும்போது சுமதி தனது பிள்ளைகளையும் அழைத்து செல்வது வழக்கமாக வைத்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 7 வயது பெண்குழந்தையை தான் வேலை பார்க்கும் கிருஷ்ணன் வீட்டிலேயே விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். குழந்தையை பார்ப்பதற்காக சுமதியின் தாயார் சின்னபொண்ணு என்பவர் குழந்தை எங்கே என்று கேட்டுள்ளார். பாட்டிக்கு குழந்தையை காட்ட சுமதி மறுத்துவிட்டாள்.
இதனையடுத்து, சின்னபொண்ணு சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. மகளிர் காவல் நிலையத்தினர் விசாரணை இந்த புகார் குறித்து விசாரணையை மேற்கொண்டனர்.
மேலும், சேலம் சைல்டு லைன் அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அந்த சிறுமியின் தாய், உறவுக்கார பெண் ஒருவரிடம் செல்போனில் பேசும் ஆடியோவும் போலீசாருக்கு சிக்கியது. இந்த ஆடியோ குறித்து சேலம் டவுன் மகளிர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தையை ரூ.10 லட்சத்திற்கு தாய் விற்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.